"ஆஸ்துமா"
"வீசிங்"
"இளைப்பு நோய்"
என்று பல பெயர்களில் அழைக்கப்படும்
இந்த நோயில் நிகழ்வது என்ன?
இரு நாசி துவாரங்களுக்குள் செல்லும் காற்று
மூக்குக்குழி கடந்து
தொண்டைப் பகுதி மற்றும் குரல் வளையைத் தாண்டி
மூச்சுக் குழாய் ( ட்ரெக்கியா) வழி கீழிறங்கி
வலது இடது என இருபக்க நுரையீரலுக்கும் செல்லும் முதன்மை மூச்சுக் கிளைக்குழாய் ( ப்ரான்கஸ்) வழியாக
நுண் சுவாசப்பைகளை( அல்வியோலை) அடைகின்றன
அங்கு ரத்தம் சுத்தீகரிக்கப்படுகிறது
காற்றில் உள்ள ஆக்சிஜன் ரத்தத்தில் ஏற்றப்பட்டு
ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியே எடுத்து
நம் உடலின் சலவைக்காரனாக செயல்படுகிறது நுரையீரல்.
நாசி தொடங்கி நுண் சுவாசைப்பை வரை காற்று கடந்து வரும் பாதை
"சுவாசப் பாதை" என்று அழைக்கப்படுகிறது.
இந்த சுவாசப்பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.
மென்மேலும் நுண்ணிய அளவுள்ள தூசிகள் உள்ளே செல்லாமல் இருக்க சுவாசப்பாதையின் உட்புற சுவரில்
சளி போன்ற மெல்லிய சுரப்பு சுரக்கிறது.
இதனால் தூசிகள், மெல்லிய மகரந்தத் தூள்கள் போன்றவை கீழ் சுவாசப்பாதைக்கு செல்லாமல் தடுக்கப் படுகின்றது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது
போன்ற அலர்ஜி ஏற்படுத்தும்
வாகனப்புகை
வீட்டுக்குள் உள்ள தூசிகள்
மகரந்தப்பொடி
புகையும் பனியும் இணைவதால் உருவாகும் புகைப்பனி
ஆகியவற்றால்
மேலதிகமான சளிச் சுரப்பை சுவாசப்பாதை செய்து கொண்டே இருக்கும்.
மேலும் தொடர்ந்து சுவாசப்பாதை அழற்சிக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கும்.
இதன் விளைவாக
இவர்களின் சுவாசப் பாதை சுருங்கும்.
அதனால் தேவையான அளவு காற்று நுரையீரலுக்குள் உட்புக இயலாது.
அதனால்
மூச்சுத் திணறல்
நெஞ்சுப்பகுதி அழுத்தம்
நெஞ்சு வலி
மூச்சு விடும் போது கீஸ் கீஸ் என்ற சத்தம் வருதல்
போன்றவை ஏற்படும்.
எப்போதெல்லாம் ஆஸ்துமா தீவிரமாகும் ??
- அதீத வெப்பம் /அதீத குளிர் நிலை
- அதீத காற்று மாசு
- மகரந்தப் பொடி மாசு
- வாகனைப் புகை
- உடல் பயிற்சி
ஆகியவற்றுக்கு திடீரென வெளிப்படும் போது ஆஸ்துமா அட்டாக் வருகிறது.
வெயில் காலங்களில்
அதீத வெப்பமும் அதீத ஈரப்பதமும் காற்றில் நிலவும்
இதனால் தூசுப்பொருட்களை காற்று தன்னகத்தே அதிகமான அடர்த்தியில் கொண்டிருக்கும்.
இதன் விளைவாக
ஆஸ்துமா நோயர்கள் சுவாசிக்கும் போது
உடனடியாக ஆஸ்துமா தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.
ஆஸ்துமா தீவிரமடைவதை எப்படித் தடுப்பது?
- அதீத உஷ்ணத்தில் இருந்து விட்டு திடீரென அதீத குளிர் நிலவும் குளிரூட்டப்பட்ட அறைகளில் நுழைவதும்
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து உடனடியாக அதீத வெப்பத்திற்கு செல்வதும் ஆஸ்துமாவைத் தூண்டும்.
கவனம் தேவை.
- வெயில் அதிகமாக அடிக்கும் நண்பகல் நேரங்களில் வெளியில் உலவுவதைத் தவிர்க்க வேண்டும்
- நீர்ச்சத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் நீர்ச்சத்து வறட்சி நிலையால் ஆஸ்துமா தூண்டப்படும்.
எனினும் அதிகுளிர் நீரைப் பருகுவது தவறு. திடீரென குளிர் நீரை அதிகமாகப் பருகுவது ஆஸ்துமாவை வரவழைக்கும்
- உடற்பயிற்சி செய்வதற்கு அதிகாலை நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
- வெளியிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது வாகனப்புகை / மகரந்தத் தூள் போன்றவற்றை நுகர்வதில் இருந்து பாதுகாப்பு தரும்
- வெளியே சென்று வீடுகளுக்குள் நுழையுமுன் கைகளை நன்றாக வழலை கொண்டு கழுவ வேண்டும்.
பல நேரங்களில் உடைகளில் தூசி/ மகரந்தத் தூள் ஒட்டிக் கொண்டு வரும். எனவே வீட்டுக்குள் உடையை மாற்றுவது அவசியம்.
வெளியே உடுத்திய உடையை துவைக்கப் போடுவது சிறந்தது.
பல நேரங்களில் உடைகளில் ஒட்டியுள்ள மகரந்தத் தூள் ஆஸ்துமாவை ட்ரிகர் செய்யும்
- புகை பிடிப்பது தவறு (FIRST HAND SMOKING).
வீடுகளுக்குள் புகை பிடிப்பது மாபெரும் தவறு ( SECOND HAND SMOKING).
சிகரெட் பீடி கணேஷ் போன்றவற்றை பாக்கெட்டில் வைத்திருந்து அதில் உள்ள நுண் பொடிகளை ஆஸ்துமா நோயாளி நுகர்ந்தாலும் அதன் மூலம் ஆஸ்துமா தூண்டப்படும் ( THIRD HAND SMOKING)
- கண்டிப்பாக வெயில் காலங்களிலும் ஆஸ்துமா இன்ஹேலர்களைத் தொய்வின்றித் தொடருதல் வேண்டும்.
ஆஸ்துமா அட்டாக் ஏற்பட்டால் அதில் இருந்து இண்ஸ்டண்ட் விடுதலை அளிக்கும் இன்ஹேலர்கள் எப்போதும் கையில் இருக்க வேண்டும்.
உங்களது நுரையீரல் சிறப்பு நிபுணரை (பல்மோனாலஜிஸ்ட்) சந்தித்து வெயில் காலத்துக்கு ஏற்றவாறும் தங்களது உடல் நிலையைப் பொருத்தும் சிகிச்சையை வரையறுத்துக் கொள்வது உங்களது பொறுப்பு
ஆஸ்துமா குளிர்கால நோய் மட்டுமன்று
வெயில் காலத்திலும் அதிக கவனம் தேவை...
إرسال تعليق
0تعليقات