ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பிஎஸ்சி பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. 3 ஆண்டு காலம் கொண்ட இப்படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் 2 ஆண்டு இயற்பியல் வேதியியல், உயிரியல், கணிதம், ஆகிய பாடங்களையும் பொதுவாக படிப்பார்கள்.
இறுதி ஆண்டில் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு பாடத்தை சிறப்பு பாடமாக எடுத்து விரிவாக படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பட்டம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் இணையவழியில் பாடங்களை நடத்துவார்கள். படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் பட்டத்தை வழங்கும். இந்த பட்டம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.
பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் இந்த சிறப்பு பிஎஸ்சி பட்டப்படிபில் சேரலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இப்படிப்பில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேருவதற்கு ஜூன் மாதம் 20-ம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை அறிவித்துள்ளார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்