சென்னை :
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டில் அமர்ந்தும் தொங்கியபடியும் சாகச பயணம் செய்வது அவ்வப்போது நடைபெறுகிறது. இத்தகைய செயல் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156ன் படி குற்றமாகும்.
இவ்வித பயணங்கள் சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. இது போன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அது கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயணிகளின் இதுபோன்ற சாகச நடவடிக்கைகளை தடுக்க தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் நடைபெறும் குற்றச்செயல்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்