திருடிய செல்போனால் நண்பர்களுக்குள் தகராறு – 26 வயது இளைஞர் குத்திக் கொலை!
செல்போன் விவகாரத்தில் மோதல்!
சென்னை பல்லாவரம் பகுதியில் செல்போன் தொடர்பாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை ஹஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் தனது நண்பர்களுடன் வியாழக்கிழமை இரவு ஒன்றாகச் சேர்ந்திருந்தார். அப்போது அவர்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதால் கொலை!
அந்த நேரத்தில் திருடப்பட்டதாகக் கூறப்படும் செல்போன் ஒன்றை யார் வைத்திருந்தது என்பது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரித்த நிலையில், ஆகாஷ் மீது நண்பர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் கத்திக்குத்துக் காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒருவர் கைது – மற்றவர்களுக்குத் தேடுதல்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார், ஆகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக குரு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள விமல்ராஜ் உள்ளிட்ட மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
செல்போன் தொடர்பான சிறிய தகராறு இளைஞரின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












