நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை! 31 வயது இளைஞர் கைது!
ரயில் பெட்டிக்குள் பெண் சடலம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த நவம்பர் 18ஆம் தேதி காலை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியின் இருக்கைக்குக் கீழே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளி!
இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், சம்பவம் நடந்ததாகக் கருதப்படும் நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை ரயில் பெட்டியிலிருந்து ஒருவர் இறங்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

31 வயது இளைஞர் கைது!
போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஐயப்பன் (31) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் கண்டறியப்பட்டது.
போலீசாரின் தகவலின்படி, அதிகாலை நேரத்தில் நடைமேடை அருகே இருந்த பெண்ணை ரயில் பெட்டிக்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ஐயப்பனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய விசாரணை!
கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவரது குடும்பத்தினரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டிக்குள் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












