
தமிழ்நாடு நாள்’ விவகாரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தவெக (TVK)!
சென்னை: 1956-ஆம் ஆண்டு தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1-ஆம் தேதியை, இனி ஆண்டுதோறும் ‘தமிழ்நாடு நாள்’ என்று கொண்டாடுவோம் என தமிழக வெற்றிக் கழகம் (TVK) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடுவதற்கான தேதி குறித்து அதிமுக (நவம்பர் 1) மற்றும் திமுக (ஜூலை 18) ஆகிய முக்கியக் கட்சிகளிடையே நீண்ட காலமாக வெவ்வேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில், இந்த இரண்டு தேதிகளுமே மிக முக்கியமானவை என்பதால் இரண்டையுமே ‘தமிழ்நாடு நாள்’ என்று கடைப்பிடிக்கப்படும் என தவெக அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழி வாரியான மாநில மறுசீரமைப்பு!
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெடித்தன. இதன் விளைவாக, 1956-ஆம் ஆண்டில் மாநிலங்கள் மொழி வாரியாகச் சீரமைக்கப்பட்டன. அப்போது, இந்தியா 6 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட நிலையிலிருந்து, 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட அமைப்பாக மாறியது.
அதுவரை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கியிருந்த ‘சென்னை மாகாணம்’ (Madras Presidency), அங்கு வாழ்ந்த மக்களின் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தற்போது ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப்படும் பகுதி, அப்போது ‘சென்னை மாநிலம்’ (Madras State) என்று பெயரிடப்பட்டது.
இந்த வரலாற்றுச் சீரமைப்பின் அடிப்படையில், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நவம்பர் 1-ஆம் தேதியை முறையே ‘கர்நாடக நாள்’, ‘கேரள நாள்’, ‘ஆந்திர நாள்’ மற்றும் ‘புதுச்சேரி நாள்’ என்று பெருமையுடன் கொண்டாடி வருகின்றன.
‘தமிழ்நாடு’ என வரலாற்றுப் பெயர் மாற்றம்!
மொழி வாரியான மாநில மறுசீரமைப்பிற்குப் பிறகு, ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’ என்று சூட்ட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை தமிழர்களின் உணர்வாக எழுந்தது. 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-அன்று, அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, ‘சென்னை மாநிலம்’ என்பதை அதிகாரப்பூர்வமாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
இந்த இருவேறு வரலாற்று நிகழ்வுகளை முன்னிறுத்தியே அதிமுக நவம்பர் 1-ஐயும், திமுக ஜூலை 18-ஐயும் மாநில நாளாக முன்னிறுத்தும் நிலையில், தவெக இந்த இரண்டு தேதிகளையும் அரவணைத்துச் செல்வது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





