நாய், பன்றி போன்றவை கழிவை உண்பது ஏன்?

123
By -
0

நாய், பன்றி போன்றவை கழிவை உண்பது ஏன்?

உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத சமயம் மிருகங்கள் கழிவை உண்பது வழக்கம். நகர்புறத்தில் இயற்கையான உணவு கிடைக்காத நாய்கள், பன்றிகள் ஆகியவை கழிவை உண்பதை காணலாம். சிம்பன்சிகள் மாதிரியானவற்றுக்கும் இவ்வழக்கம் உண்டு. இதன் மூலம் இவற்றுக்கு கிடைக்கும் முக்கிய வைட்டமின்களில் ஒன்று பி12

வைட்டமின் B12 என்பது நரம்பு மண்டலம், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி ஆகியவற்றிற்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. இது இல்லாமல் தூக்கமின்மை, நினைவுச் சிதைவு, மனச்சோர்வு, நரம்பியல் கோளாறுகள், ரத்தஹீனம் (அனிமியா) போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த B12 பாக்டீரியாக்களால், குறிப்பாக விலங்குகளின் பெருங்குடலில் இயற்கையாகவே உருவாகிறது. ஆனால் மனிதர்களில் இது உருவாகும் இடமான பெருங்குடல், அதை உறிஞ்சும் சிறுகுடலின் பின் பகுதியில் இருப்பதால், நம்மால் உற்பத்தி செய்யப்படும் B12 உடலில் உறிஞ்சப்படாமல் கழிவாக வெளியேறுகிறது. அதனால், நமக்குத் தேவையான B12-ஐ உணவின் வழியாகவே பெற வேண்டிய நிலை உருவாகிறது.

B12 உற்பத்திக்கு தேவையான பாக்டீரியாக்கள் தாவரங்களில் இயங்குவதில்லை. எனவே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற தாவர உணவுகளில் B12 இயற்கையாக இல்லாது போகிறது.

ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகள் புல் மேயும் போது அதனுடன் கலந்திருக்கும் பூச்சிகள், சிறுநீர், மற்ற விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றில் இருந்து B12ஐ பெறுகின்றன. அதேபோல் நாய், பன்றி, சிம்பன்ஸி போன்றவை B12 பற்றாக்குறையைத் தவிர்க்க, இயற்கையாகவே உள்ள கழிவுகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பதும் இதனால்தான்.

விலங்குகள் உணவின் வாயிலாக பெறும் B12, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு இரத்தம் வழியாக உடலின் பல பகுதிகளில் பரவுகிறது. இது தசைகள், குறிப்பாக கல்லீரல் போன்ற உறுப்புகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, இறைச்சி மற்றும் கல்லீரல் போன்றவை B12-ன் மிகச் சிறந்த இயற்கை ஆதாரங்களாக உள்ளன.

மாடுகளில் B12 பால் வழியாகவும், கோழிகளில் B12 முட்டையின் உற்பத்தி செயல்பாட்டில் கலந்து சேர்வதாலும், பால் மற்றும் முட்டையும் B12ஐ தரக்கூடிய இயற்கையான வழிகளாகக் கருதப்படுகின்றன. 

ஆனால் வெறுமனே பாலை மட்டும் நம்புவது சைவ உணவினருக்கு போதாது. ஏனெனில் ஒரு நாளுக்கு தேவையான அளவு பி12 பெற ஒருவர் ஒரு நாளுக்கு குறைந்தது 750 மில்லிலிட்டர் பால் பருகவேண்டும். இது காரியசாத்தியமில்லாத விசயம்.

முழுமையான சைவ உணவினை பின்பற்றுபவர்கள், குறிப்பாக வீகன்கள் (பால் மற்றும் முட்டையையும் தவிர்ப்பவர்கள்), B12 பற்றாக்குறைக்கு அதிக ஆட்பட்டிருப்பார்கள். எனவே இவர்கள் B12 செறிவூட்டப்பட்ட உணவுகள் (fortified foods) அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் தேவையை நிரப்ப வேண்டியது கட்டாயம்.

முன்நூற்றாண்டுகளில் மக்கள் மாசுபட்ட ஆறு, குளங்களில் இருந்து குடிநீரை பருகியதால், கழிவுகள், பூச்சிகளின் உடல் ஆகியவை கலந்த மாசுபட்ட நீர் வழியாக B12ஐ குறிப்பிட்ட அளவுக்காவது பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நீர் சுத்திகரிப்புமுறையால் அது சாத்தியமில்லாமல் போகிறது..

B12 என்பது நரம்பியல் மற்றும் இரத்த சுழற்சி ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து. இது இயற்கையாக விலங்கு உணவுகளில்தான் காணப்படுகிறது. சைவ உணவினை மட்டுமே பின்பற்றுபவர்கள், குறிப்பாக வீகன்கள், சப்ளிமெண்ட்கள் அல்லது B12 செறிவூட்டப்பட்ட உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)