நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் (27), போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக இறந்தார். கோயிலுக்குப் பின்னால் உள்ள மாட்டுத் தொழுவத்தில் போலீசார் அஜித்தை அடிக்கும் வீடியோ பார்வையாளர்களை கவலையடையச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 போலீசார், குற்றப்பிரிவு காவல் துறையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட பிறகு, 5 போலீசார் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இளைஞர் அஜித் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த நிலையில், சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராமநாதபுரம் எஸ்பி சந்தேஷ் சிவகங்கை எஸ்பியாக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். வழக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Chief minister @mkstalin apologises to AjithKumar’s family. Asks “sorry” to #Sivaganga custodial torture victim AjithKumar’s mother. Asks them to be confident and promises strict action against whoever did this. @TheWeekLive pic.twitter.com/FfXOKYuKIM
— Lakshmi Subramanian (@lakhinathan) July 1, 2025
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடந்திருக்கக்கூடாது, இது யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறி குற்றம் செய்தவர்களை இந்த அரசு நிச்சயமாக தண்டிக்கும்! பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும்!” என்று கூறியிருந்தார்.
மேலும், நேற்று இறந்த அஜித்குமாரின் பெற்றோரிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். மேலும், கவலைப்பட வேண்டாம்; அரசு எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் என்றும் கூறினார்.
இந்த சூழ்நிலையில், திருப்புவனம் இளைஞரான அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு தற்போது அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் அரசு வேலை உத்தரவை நவீன்குமாரிடம் வழங்கினார். குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது.





