நகைக்காகத் தாயைக் கொன்ற மகள்! கொள்ளை நாடகம் அம்பலம் – ஆசிரியை சரண்யா கைது!
வீட்டில் தனியாக இருந்த தாய் கொடூரக் கொலை!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள தென்கடப்பந்தாங்கல் விஐபி சிட்டி பகுதியில் கீதா (54) என்பவர் வசித்து வந்தார். தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதனால் கீதா தனது மூத்த மகள் சரண்யாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சொந்த வேலை காரணமாக கடந்த முன்தினம் கீதா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
நகை, பணம் கொள்ளை என நாடகம்!
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 சவரன் தங்க நகைகளும், வீட்டிலிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை!
கொலை நடந்த வீடு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே தனிமையான பகுதியில் அமைந்திருந்ததால், சுற்றுப்புறங்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த கீதாவின் மூத்த மகள் சரண்யா (34) மீது சந்தேகம் எழுந்தது. தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த சரண்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
நகைக்காக ஏற்பட்ட தகராறு – தாயைக் கொன்றதாக வாக்குமூலம்!
விசாரணையில், தனது சொந்தப் பணத்தேவைக்காக தாயிடம் இருந்த தங்க நகைகளை அடகு வைக்க சரண்யா கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கீதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், சரண்யா தனது தாயைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு, வீட்டில் கொள்ளை நடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி போலீசாரைத் திசைதிருப்ப முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகள் கைது – மற்றொரு நபரிடமும் விசாரணை!
இதையடுத்து சரண்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சரண்ராஜ் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயையே நகைக்காக மகள் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












