
டைப் டூ நீரிழிவிற்குத் தீர்வு கண்டுவிட்டதா சீனா?
உணவாக உட்கொள்ளப்படும் மாவுச்சத்து உடலுக்குள் க்ளூகோஸாக மாற்றம் அடைகிறது. அதை கிரகிக்க நமது கணையத்தில் இருந்து பீட்டா செல்கள் இன்சுலின் எனும் ஹார்மோனை சுரக்கின்றன. இந்த ஹார்மோன்
சரிவர சுரக்காமல் போவதாலும் ,
சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக அதன் பணியை செய்யாமல் போவதாலும்
ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன. இதைத் தான் நாம் நீரிழிவு ( டயாபடிஸ்) என்று அழைக்கிறோம்.

நீரிழிவில் முக்கியமான இரண்டு வகைகள் உண்டு.
டைப் ஒன்று – இந்த வகையில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது.
எனவே கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலினை ஊசியில் போட வேண்டும்.
இந்த வகை பெரும்பாலும் குழந்தைகள், சிறார், சிறுமியரிடத்தில் கண்டறியப்படும்.
டைப் டூ – இந்த வகையில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தேவைக்கும் மிகுதியாக சுரக்கும். ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் அதன் பணியைச் செய்யாது.
இதற்கடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது “ஸ்டெம் செல்கள்” பற்றி
அதாவது குருத்தணு செல்கள்.
நம் அனைவருக்கும் தெரியும்.நாம் அனைவருமே தாயின் கருமுட்டை மற்றும் தந்தையின் விந்தணு ஆகிய இரண்டும் ஒன்றாய் சேர்ந்து உருவான “கரு” எனும் ஒற்றை செல்லில் இருந்து உருவானவர்கள்.
அந்த ஒரு செல் தான்
பல ட்ரில்லியன் செல்களாக மாற்றம் அடைந்து மனித வடிவத்தை அடைந்திருக்கிறோம்.
ஒரு செல் பல செல்களாக உருமாறும் போது பல திசுக்களாக உருமாறி
பல உறுப்புகளாக மாற்றம் கண்டு வளர்ச்சி அடைகின்றன.
இப்படியாக ஒரு செல் –> தன்னகத்தே பல மாற்றங்களை அடைந்து திசுவாகவோ உறுப்பாகவோ உருமாற்றம் அடைகிறது.
இத்தகைய திறன் படைத்த செல்கள் “ஸ்டெம் செல்கள்” என்று வகுக்கப்படுகின்றன. இத்தகைய ஸ்டெம் செல்கள் –
கரு உருவாகும் நிகழ்வில்,
கருவின் வெளிப்புறம் ( எக்டோடெர்ம்)
கருவின் நடுப்புறம் ( மீசோடெர்ம்)
கருவின் உட்புறம் ( எண்டோடெர்ம்) என்று மூன்று இடங்களில் இருந்தும் செல்கள் பல்கிப் பெருகி முக்கியமான உறுப்புகளாக மாற்றம் அடைகின்றன.
இதில்
கருவின் வெளிப்புறத்தில் இருந்து
நமது உடல் போர்த்தும் தோல்,
நமக்கு உணர்வளிக்கும் மூளை & தண்டுவட நரம்பு உள்ளிட்ட நரம்பு மண்டலம்,
கண், செவி உள்ளிட்ட உணர்புலன் உறுப்புகள் ஆகியன தோற்றம் பெறுகின்றன.
நடுப்புறமான மீசோடெர்மில் இருந்து
நமது உடலின் “பில்லர்களான” எலும்புகள், அவை போர்த்தும் தசைகள், இணைப்புத் திசுக்கள், ரத்த ஓட்ட மண்டலம், சிறுநீரகங்கள், இனப்பெருக்க உறுப்புகள் தோற்றம் காண்கின்றன.
உட்புறமான எண்டோடெர்மில் இருந்து
நமது ஜீரண மண்டலத்தின் வெளிப்புற சுவர், சுவாசப்பாதை, கல்லீரல், கணையம் , தைராய்டு சுரப்பி உள்ளிட்டவை தோற்றம் காண்கின்றன.
இதற்கடுத்த படியாக
நன்றாக வளர்ந்த மனிதனிடம்
எலும்பு மஜ்ஜை, தசைகள், மூளை உள்ளிட்ட இடங்களில் இந்த ஸ்டெம் செல்கள் நிரம்பியுள்ளன. இவற்றின் வேலை,
திசுக்களை மறுசீரமைப்பு , புனரமைப்பு செய்தல் போன்றவற்றை இந்த செல்கள் செய்யும்.
டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு
நிரந்தர தீர்வு கண்டறியப்பட்டதா?
சீனாவில்
ஸ்டெம் செல் ஆராய்ச்சிக் குழு –
60 வயது நபர் ஒருவரைச் சந்தித்து இந்த ஆராய்ச்சிக்கு அவர் உட்பட இணங்கியதும்
அவருக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த 60 வயது நபருக்கு
கடந்த 24 வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது.
இந்நிலையில்
தனது சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் முனைந்து இந்த ஆய்வுக்கு ஒப்புக் கொண்டார்.
இந்த ஆய்வில்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நபரின் எண்டோடெர்ம் ஸ்டெம் செல்களை(EnSCs) எடுத்து அதை உயர் உயிரியல் தொழில்நுட்பங்கள் மூலம்
இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களாக( Pancreatic Islet cells) உருமாற்றம் செய்தனர்.
இந்த செல்கள் , இயற்கையான கணையத்தின் பீட்டா செல்களைப் போலவே இன்சுலின் மற்றும் க்ளூகோகானைச் சுரக்கவல்லவையாக இருந்தன.
இதற்கு ஈ – ஐலெட் செல்கள் (Endodermal derived – islet cells) என்று பெயர் வைத்தனர்.
ஜூலை 2021 இல்,
இந்த ஈ – ஐலெட் செல்களில் 12 லட்சம் ஸ்டெம் செல்களை
நோயாளியின் கல்லீரலின் போர்ட்டல் சிரையில்
தோல்வழி ஊசி மூலம் செலுத்தினர்.
இதற்குப் பிறகு
4,8,12,16,20,24,36,48 வாரங்கள் என தொடர்ந்து 116 வாரங்கள் வரை நோயாளியைக் கண்காணித்து வந்தனர்.
இதில் பல வியத்தகு
முன்னேற்றங்களை நோயாளி சந்தித்தார்.
நோயாளிக்கு இந்த ஐ லெட் செல்களை ஏற்றிய
11 வாரங்களுக்குள்
அவர் வெளியில் இருந்து இன்சுலின் போடும் தேவையற்றவராக மாறினார்.
56 வாரங்களில்
நீரிழிவு கட்டுப்பாட்டுக்கான வாய்வழி மாத்திரைகளின் தேவையற்றவறாக மாறினார்
நீண்ட நாள் நோயாளியைக் கண்காணித்ததிலும் அவரது கணையத்தின் பீட்டா செல்களின் செயல்திறன் முன்னேற்றம் கண்டதை அறிய முடிந்தது.
இது கூட போனஸாக உறுப்பு மாற்று மூலம் பொருத்த
சிறுநீரகத்தின் செயல்திறனிலும் முன்னேற்றம் கண்டது தெரியவந்தது
ஐலெட் ஸ்டெம் செல்களைச் செலுத்தும் முன் இன்சுலின் ஊசி போடப்பட்டு மூன்று மாத சராசரி சர்க்கரை அளவான Hba1c 6.6 இருந்தது
சிகிச்சைக்குப் பின் 85 வாரங்களில் எந்த சிகிச்சையும் இல்லாமல் 5.5% ஐ அடைந்து 113 வாரங்களில் 4.6% என்ற அளவை அடைந்துள்ளது.
அவரைப் பின்தொடர்ந்த காலம் முழுவதும் அவருக்கு
தாழ் ரத்த சர்க்கரை நிலையோ ( ஹைப்போ கிளைசீமியா) மற்றும் உயர் ரத்த சர்க்கரை நிலையோ ( ஹைப்பர் கிளைசீமியா) ஏற்படவில்லை.
இந்த சிகிச்சைக்குப் பின்
தற்காலிக வயிற்று உப்புசம், பசியின்மை, லேசான எடையிழப்பு போன்ற சாதாரண பக்கவிளைவுகள் தோன்றியுள்ளன.
இந்த சிகிச்சைக்கு பிறகு
கணையத்தின் பீட்டா செல்கள் சுரக்கும் சி-பெப்டைடு அளவுகளிலும் முன்னேற்றம் கண்டது குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின்
பலங்களாக இருப்பவை கணையம் ஆதியில் தோன்றிய எண்டோடெர்மல் ஸ்டெம் செல்களைக் கொண்டே ஐலெட் செல்கள் உருவாக்கப்பட்டுள்ளமையால் – இவை எளிதாக எந்த சிக்கலும் இல்லாமல், எதிர்ப்பு சக்தியால் பாதிப்புக்குள்ளாகாமல் உடலினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கணையத்தின் பீட்டா செல்களை மிகவும் ஒத்து உள்ளதால் அவற்றை அடைந்து அவற்றின் மீளுருவாக்கத்திலும் பங்கேற்கின்றன.
இந்த ஆராய்ச்சியில் டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகளை விடுத்து டைப் டூ நீரிழிவு நோயாளியைத் தேர்ந்தெடுத்தமையால்
ஸ்டெம் செல் சிகிச்சையை டைப் டூ நோயாளிக்கும் வழங்கலாம் எனும் புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வின்
குறைபாடுகளுள் சில
ஆய்வில் ஒருவர் மட்டுமே பங்குபெற்றுள்ளார்.
எனவே இந்த ஆய்வை இன்னும் பெரிய பங்கேற்பாளர்கள் குழுவுக்குச் செய்து பார்த்து இதே முடிவுகள் வருவதையும் பக்கவிளைவுகள் தோன்றாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஈ ஐலெட் செல்களைச் செலுத்தியவுடன் கணையத்தின் பீட்டா செல்களும் புத்துணர்வு பெற்று இன்சுலினை சுரந்துள்ளன.
எனவே முற்றிலும் பீட்டா செல்கள் செயல்படாத டைப் ஒன்று நோயாளிகளில் இந்த ஸ்டெம் செல் சிகிச்சையை செய்து ஆய்வு நடத்த வேண்டும்.
இந்த ஆய்வில், ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு புற்றுக் கட்டிகள் தோன்றவில்லை என்பது சிறப்பானது.
தற்போது சீனாவில் வெற்றி கண்டுள்ள
இந்த செல் சிகிச்சை – ஒருவருக்கு மட்டுமே வழங்கி – ஆய்வு நிலையில் வெற்றி கண்டுள்ளது.
எனவே இந்த சிகிச்சை முறையை
பல நூறு பல ஆயிரம் பேர்களுக்கு செய்து
வெற்றி காண வேண்டும்.
மருத்துவ வரலாற்றில் பல சிகிச்சை முறைகள், மருந்துகள் சிறு ஆய்வு நிலையில் வெற்றி பெற்றதாகவும் பிறகு அதிகமான மக்களுக்கு ஆய்வு செய்யும் போது தோல்வியும் அடைந்துள்ளன.
இந்த பரிசோதனை முயற்சியை இன்னும் பலருக்கு முயற்சி செய்து வெற்றி பெறும் போது
பாதுகாப்பான
திறனுள்ள சிகிச்சையாக
கூடவே கைக்கு எட்டும் செலவினத்தில் இது எதிர்காலத்தில் உருமாறும்.





