சென்னை
ஓய்-யோகேஸ்வரன் மூர்த்தி
சென்னை: சிங்கப்பன் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று துவக்கி வைப்பதாக இருந்தது, ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்வதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்தத் திட்டத்தைக் கொண்டுவர விஜய் கையெழுத்திட்டிருந்தார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக கடந்த மே 10ம் தேதி பொறுப்பேற்ற விஜய், கோட்டையில் உள்ள தனது அறையில் அமர்ந்து மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது இந்த ‘சிங்கம் சிறப்பு அதிரடிப் படை’ கோப்பு. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் இணைய குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பது ஆகிய முதன்மை நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தனி ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு அவரது கீழ் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்படுவர். நாளை பிரமாண்ட அரசு விழாவில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்க உள்ளார். இதற்காக தனி விமானத்தில் இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்லும் முதல்வர் விஜய், பிரதமரை சந்திக்க உள்ளார்.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் சென்னை திரும்பியதும் அடுத்த சில நாட்களில் இத்திட்டம் தொடங்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறப்பு அதிரடிப் படையினர் மாநிலம் முழுவதும் சுமார் 37 முக்கிய நகரங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் புதிய மைல் கல்லாக பார்க்கப்படும் இந்த திட்டம் முதல்வர் சென்னை திரும்பியதும் உடனடியாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் நடைபெற்று வரும் சூழலில், சிங்கப்பென் பாதுகாப்பு படை திட்டம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Source link

