ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

Unknown
By -
0


வங்கதேச ராணுவம், அரசியலில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததால், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் துவக்கினர். இந்நிலையில், வங்கதேச அரசியலில் அந்நாட்டு ராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் விபரம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்சியாக களம் இறங்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி எங்களை அழைத்து ராணுவம் பேச்சு நடத்தியது. இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து, டாக்கா பல்கலை வளாகத்திற்குள் தேசிய குடிமக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது பேசிய ஹஸ்னத் அப்துல்லா, “ராணுவத்தினர் கன்டோன்மென்ட் உள்ளே இருந்து மட்டுமே தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்குள் நுழைந்து அரசியலில் தலையிடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்,” என்றார்.

மாணவர் போராட்டத்தால் டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவம், பல்கலைக்குள் செல்லாமல் டாக்கா சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)