
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள அங்கனேஸ்வரர் கோவில் தெரு, மூன்றாவது வார்டில் வசிப்பவர் விஜய் (30) அபிராமி (25), இந்த தம்பதியருக்கு அஜய் (6) என்ற மகனும், கர்ணிகா (4) என்ற மகளும் இருந்தனர்.
அதே பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பிரியாணி கடையில் பணிபுரிந்த “அபிராமி” மற்றும் மாஸ்டர் “மீனாட்சி சுந்தரம்” ஆகியோருக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது விஜய்க்கு தெரியவந்தது . பலமுறை கண்டித்த விஜய் கேட்பதாக தெரியவில்லை . இதனால் இவர்களுக்கு அடிக்கடி சண்டைகளும் வந்த வண்ணம் இருந்தது. விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் மீனாட்சி சுந்தரம் வருவது வாடிக்கையாக இருந்த வந்த நிலையில் , இவர்களின் உறவுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்து வந்த நிலையில், ஒரு சமயத்தில் மீனாட்சி சுந்தரம் இந்த சூழலில், அஜய் மற்றும் கர்ணிகா 2018 ஆம் ஆண்டு அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டனர். இதில் அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் தலைமறைவாக இருந்தார்.
இது தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது, பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டதாகவும் , மேலும் குழந்தைகளின் முகங்களில் தலையணைகளால் நசுக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கையில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குன்றத்தூர் போலீசார் அபிராமியை தேடிவந்த நிலையில் , அவர் தென் மாவட்டத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அபிராமியை பிடித்து விசாரித்தபோது, பிரியாணி மாஸ்டர் மீனாட்சி சுந்தரமும் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். குன்றத்தூர் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எனவே, இந்த வழக்கின் விசாரணை விரைவாக நடந்து வந்தது.
சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்த பிறகு, நீதிபதி செம்மல் இன்று (24-7-2025) இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார். இதற்காக, அபிராமியும் மீனாட்சி சுந்தரமும் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் குற்றவாளிகள் என்று நீதிபதி செம்மல் தீர்ப்பளித்தார்.
அடுத்து, நீதிபதி செம்மல் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார். அப்போது அபிராமி, “எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். நான் 7 வருடங்களாக சிறையில் இருக்கிறேன். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றார். நீதிபதி, “குழந்தைகளைக் கொல்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது. எனவே, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அபிராமி நீதிமன்ற அறையில் கண்ணீர் விட்டார். இதையடுத்து, போலீசார் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.





