செய்திகள்தமிழகம்

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து:.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை!

 

கடலூர்  செம்மங்குப்பம்  ரயில் விபத்து

விபத்துகளைத் தடுக்க அனைத்து ரயில்வே கேட்டுகளையும் இண்டர்லாக்கிங் செய்யவேண்டும்!

செம்மங்குப்பத்தில் உடனடியாக இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

 

விசிக சார்பில் அஞ்சலி

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே ‘லெவல் கிராஸிங்கில்’ பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்த மாணவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரயில்வே துறையின் சார்பில் தலா ரூ.50 இலட்சம் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

கடலூர் செம்மங்குப்பம் இரயில்வே லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது இரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவரும் ஒரு ஓட்டுநரும் காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ‘கேட் கீப்பரின்’ கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்துள்ளது எனத் தெரியவருகிறது. எனவே, இதற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தலா ரூ.50 இலட்சம் இழப்பீடு தரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

 

தென்னக இரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் மட்டும் 490 லெவல் கிராஸிங்குகள் உள்ளன. அவற்றில் 340 கேட்டுகள் வரை ‘இண்டர் லாக்கிங்’ முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இண்டர்லாக்கிங் செய்யப்பட்ட கேட்டுகளை ரயில் வரும் நேரத்தில் திறக்க முடியாது. மீதம் 148 கேட்டுகள் இண்டர்லாக்கிங் செய்யப்படாமல் உள்ளன. அவற்றில் செம்மங்குப்பம் ‘ரயில்வே கேட்டும்’ ஒன்று ஆகும். இண்டர்லாக்கிங் செய்யப்படாத கேட்டுகளை கேட் கீப்பர்கள்தான் திறந்து பூட்ட வேண்டும். அவருக்கு ரயில் வருவது குறித்த தகவல் அருகாமையில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தெரிவிக்கப்படும். செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பருக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர் கேட்டை பூட்டாமல் விட்டுள்ளார். தொடர்ந்து பணி செய்த அயர்ச்சியில் தூங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இண்டர்லாக்கிங் முறை இல்லாததும், கேட் கீப்பரின் கவனக்குறைவும்தான் மூன்று உயிர்கள் பறிபோகக் காரணம். எனவே, இண்டர்லாக்கிங் செய்யப்படாத அனைத்து கேட்டுகளையும் உடனே இண்டர்லாக்கிங் செய்ய வேண்டும். செம்மங்குப்பத்தில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்டித்தர வேண்டும். அதற்குத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

 

சுரங்கப் பாதை அமைக்க அந்த கேட் வழியே நாளொன்றுக்கு சராசரியாக இருபதாயிரம் வாகனங்கள் செல்ல வேண்டுமென இரயில்வே அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. மேம்பாலம் என்றால் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் வாகனங்கள் போக வேண்டும். இந்த விதியின் படி போதுமான வாகனப் போக்குவரத்து இல்லாததைக் காரணம் காட்டி 490 லெவல் கிராஸிங்குகளும் பெரும்பாலும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவிக்கின்றனர். எனவே, நாளொன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் செல்லும் லெவல் கிராஸிங்குகளில் சுரங்கப் பாதையோ , மேம்பாலமோ அமைத்துத் தர இரயில்வே துறை முன்வர வேண்டும். அவ்வாறு அமைப்பதற்கு வாகன எண்ணிக்கையை மட்டும் ஒரே தகுதியாகக் கருதாமல் மக்களின் தேவை, புவியியல் அமைப்பு உள்ளிட்டவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்