
தவறான தகவல் அளித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தபால் துறை
மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகப்படுத்த 21,22 தேதிகளில் பொது பரிவர்த்தனை நிறுத்தம் என அறிவித்துவிட்டு 19ஆம் தேதியே பொது பரிவர்த்தனையை நிறுத்திய அவலம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் அடுத்த தலைமுறை செயலியை அறிமுகப்படுத்த இம்மாதம் 21 மற்றும் 22ஆம் தேதி காலை 10 மணி வரை பார்சல் புக்கிங், விரைவு தபால் புக்கிங் வசதி மற்றும் பதிவு தபால் உட்பட எந்த பரிவர்த்தனைகளும் செயல்படாது என 2025 ஜூலை 19 செய்தித்தாள்களில் தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தக்கலை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் 19-07-2025 அன்றே எந்த பரிவர்த்தனைகளும் செயல்படாமல் பொதுமக்கள் திரும்பிச் சென்ற அவலம் கன்னியாகுமரி மாவட்ட தபால் துறை கோட்ட கண்காணிப்பாளரின் மெத்தன போக்கையே காட்டியது. குமரி மாவட்ட தபால் துறையில் உயரதிகாரிகள் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதால் 21ஆம் தேதி செயலிழப்பு நேரம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வழங்காமல் 19ஆம் தேதி செயல் இழப்பு செய்தது பொதுமக்கள் மத்தியில் தபால் துறையின் நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மேற்கு மாவட்டத்திலிருந்து தக்கலை தபால் நிலையத்தை கடந்து வில்லுகுறி மற்றும் நாகர்கோவில் பகுதிகளுக்கு அவசரமாக அனுப்ப வேண்டிய தபால் மற்றும் இதர பணிகளுக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. தபால் துறை அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் இது போன்ற நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறினர். தபால் துறை உயர் அதிகாரிகள் செயலிழப்பு நேரம் என அறிவித்த நாட்களுக்கு முன்னதாக பொதுமக்களை அலைக்கழிக்கும் விதமாக 19ஆம் தேதி சனிக்கிழமை பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் நிலையங்களுக்கு சென்ற மக்களை ஏமாற்றியது தபால் துறையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயலாகவே உள்ளது. குமரி தபால் துறை உயர் அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் இது போன்ற பொதுமக்களை அலைக்கழிக்கும் செயல்களில் ஈடுபடுவதை விடுத்து சரியான தகவல்களை மக்களுக்கு அளித்து மக்களை அலையவிடாமல் தடுப்பதுதான் குமரி தபால் துறை மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். இல்லையென்றால் தனியார் கொரியர் நிறுவனங்களுக்கு தபால் துறை உயர் அதிகாரிகள் மறைமுகமாக உதவி வருகின்ற செயல்பாடு என்று மக்கள் மத்தியில் சந்தேகக் கண் பார்வை விழ வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை தபால் துறை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்வது சிறந்தது என்பதே அனைவரின் கூற்றாக உள்ளது





