
கருங்கடலில் போர் பதற்றம்! ரஷ்யாவிடம் போர் நிறுத்த முன்மொழிவு வைத்த உக்ரைன்
Ukraine Russia News: கருங்கடலில் தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் முன்மொழிவு – உணவு விநியோகத்துக்கு அச்சம்
ரஷ்யா–உக்ரைன் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கருங்கடல் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் இலக்குகள் மீதான தாக்குதல்களை இரு தரப்பும் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பு முன்மொழிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முன்மொழிவு மூன்றாம் தரப்பு வாயிலாக ரஷ்யாவிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலை உக்ரைன் தரப்பு எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
சமீப காலங்களில் கருங்கடல் பகுதியில் கப்பல்கள் மற்றும் துறைமுகங்களைச் சுற்றி தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் உக்ரைனின் முக்கிய துறைமுகங்கள் வழியாக நடைபெறும் தானிய ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக உணவு விநியோகத்திலும் இதன் தாக்கம் ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உலகளவில் முக்கியமான விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களாக இருப்பதால், கருங்கடல் போக்குவரத்து பாதிக்கப்படுவது சர்வதேச சந்தைக்கு முக்கியமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கோதுமை மற்றும் பிற தானியங்களின் ஏற்றுமதி தடைபட்டால், இறக்குமதியை நம்பியுள்ள சில நாடுகளில் உணவு விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் குறைந்தபட்சம் பொதுமக்கள் மற்றும் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஷ்யா இந்த முன்மொழிவை ஏற்குமா என்பது தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. இரு தரப்பினரிடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை உலக நாடுகளால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.





