பாரிஸ்
ஓய்-யோகேஸ்வரன் மூர்த்தி
பாரீஸ்: ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் அதிகமாக இருக்கும் கோடை வெப்பம், இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பச் சலனம் காரணமாக பிரான்சில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் இருந்து வீசும் அனல் காற்று வளிமண்டலத்தின் உயர் அழுத்த வளையத்தில் சிக்கியதால் உருவாகும் ‘ஹீட் டோம்’ தான் இந்த அதீத வெப்பத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரான்ஸ் வரலாற்றில் மே 25ம் தேதி அதிக வெப்பமான நாளாக பதிவாகியுள்ளது.

அன்று நாட்டின் சராசரி வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இது 1944-ல் ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது.தென்மேற்கு பிரான்சில் சில இடங்களில் வெப்பநிலை 37.1 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இந்த கடும் வெப்பத்தால் பிரான்சில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வெயிலில் இருந்து தப்பிக்க ஏரிகள், ஆறுகள், கடற்கரைகளில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். கோடை காலம் இன்னும் முழுமையாக தொடங்காததால் பெரும்பாலான கடற்கரைகளில் உயிர்காக்கும் காவலர்கள் பணியில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
பாரிஸ் மற்றும் லியோனில் ஓட்டப்பந்தய வீரர்கள் உட்பட இரண்டு விளையாட்டு வீரர்கள் தாழ்வெப்பநிலை மற்றும் மாரடைப்பால் இறந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், மே மாதத்தில் இந்த அளவுக்கு வெப்பம் நிலவுவது சாதாரண விஷயமல்ல. ஆனால், துரதிஷ்டவசமாக பருவநிலை மாற்றத்தால் பிரான்சில் இதுவே வழக்கமாகிவிடப் போகிறது என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, பிரான்சின் மேற்கு மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதி வரை வெப்பச் சலனம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இதயம் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மதிய நேரத்தில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source link
