
ரிஷிவந்தியத்தில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் நேரடியாக சென்று ஆதரவு கோரி வருகின்றனர்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் தனது தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகமாக தொடங்கி, கிராமம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மாடம் பூண்டி கூட்டு சாலையில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், அருந்தங்குடி, நரியந்தல், திருப்பாலபந்தல், பூமாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்கள் சந்திப்பின் போது, உள்ளூர் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை தீர்க்க உறுதியளித்தார்.
வசந்தம் கார்த்திகேயன் வருகையை முன்னிட்டு அந்த பகுதிகளில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இசை மற்றும் நடனங்களுடன் அவரை வரவேற்றனர். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதும், இளைஞர்கள் கோஷங்கள் எழுப்பியும் ஆதரவு தெரிவித்ததும்குறிப்பிடத்தக்கது.
பிரச்சாரத்தின் போது பேசுகையில், “ரிஷிவந்தியம் தொகுதியில் திமுகக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த காலத்தில் நாம் செய்த நலத்திட்டங்களையும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களையும் கருத்தில் கொண்டு, இந்த முறை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நாள் நெருங்கி வருவதால் ரிஷிவந்தியம் தொகுதியில் அரசியல் சூழல் மேலும் சூடுபிடித்து, முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.





